மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அரசு ஊழியர் பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அரசு ஊழியர் பலி

Update: 2023-08-11 18:45 GMT

நன்னிலம் அருகே பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அரசு ஊழியர் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு ஊழியர்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 50). இவர், நன்னிலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தேன்மொழி(38). மகள் ஓவியலட்சுமி(17).

நேற்று முன்தினம் மாலை குமார் பனங்குடியில் இருந்து திருவாரூருக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.

பள்ளத்தில் தவறி விழுந்து சாவு

திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் விசலூர் அருகே சென்றபோது நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டர் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

அந்த பள்ளத்தில் பாலம் கட்டும் பணிக்காக போடப்பட்டு இருந்த கம்பி குமாரின் வயிற்றில் குத்தி கிழித்தது. மேலும் குமாரின் மனைவி, தேன்மொழி, மகள் ஓவியலட்சுமி ஆகியோரையும் கம்பி குத்தி கிழித்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விப்ததை பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பள்ளத்தில் விழுந்த கிடந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமாரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

மனைவி-மகள் படுகாயம்

படுகாயம் அடைந்த தேன்மொழி, ஓவியலட்சுமி ஆகிய இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நன்னிலம் போலீசில் தேன்மொழி கொடுத்த புகாரின் பேரில் பாலம் கட்டும் பணியை மேற்கொண்டு உள்ள நிறுவன மேலாளர் ரவிக்குமார், மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள்-அரசியல் கட்சியினர் சாலைமறியல்

நன்னிலம் அருகே திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் விசலூர் என்ற இடத்தில் கடந்த 10 நாட்களாக பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. பாலம் கட்டும் இடத்தில் பாலப்பணிகள் நடைபெறுகிறது என்பது குறித்த எவ்வித அறிவிப்பு பலகையோ, தடுப்புகளோ வைத்து முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் செய்யப்படவில்லை.

பாலப்பணி நடைபெறும் இடத்தில் இரவு நேரத்தில் மின்விளக்கு வசதி எதுவும் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுவதாலும் இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மேலும் விபத்தில் பலியான குமாரின் குடும்பத்தினருக்கு பாலப்பணியை மேற்கொண்டு உள்ள நிறுவனத்தினர் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறி அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் அறிந்ததும் நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன், நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும், பாலப்பணியை மேற்கொண்டு உள்ள ஒப்பந்ததாரர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்ை முடிவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த சாலைமறியல் போராட்டம் காணரமாக திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்