சூரமங்கலம்:-
சேலம் ஜங்சனில் ரெயிலில் அடிபட்டு நாமக்கல் கலெக்டர் அலுவலக உதவியாளர் பலியானார்.
கலெக்டர் அலுவலக ஊழியர்
சேலம் திருவாக்கவுண்டனூர் கண்ணகி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 43). இவர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் யார்டு பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மங்களூர்-சென்னை சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் ரெயில் அவர் மீது மோதியது. இதில் சீனிவாசன் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
பலி
இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ஜங்சன் ரெயில் நிலைய மேலாளர் செல்வராஜ், ரெயில் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வர மூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை சீனிவாசன் பரிதாபமாக இறந்தார். ரெயில்வே போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சீனிவாசன் ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.