ஆட்டு தொழுவமாக மாறிய அரசு பள்ளி வகுப்பறை
கடைகோடியில் இருப்பதால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆட்டு தொழுவமாக அரசு பள்ளி வகுப்பறை மாறியுள்ளது. துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் கடும் அவதி
கல்வி என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். இளைய தலைமுறையை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.
பள்ளி சுகாதாரம் அல்லது பள்ளி சுகாதாரக் கல்வி என்பது ஒரு சுகாதார அறிவியல் ஆகும், இது பரந்த சுக நலக் கல்வியின் ஒரு வடிவமாகும். தண்ணீர், உணவு, வீடு மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பயனுள்ள நடைமுறைகள் மூலம் நடத்தையை மேம்படுத்துவதே பள்ளி சுகாதாரக் கல்வியின் முதன்மை நோக்கமாகும். ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கூடம் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் நேர்மறையாக உள்ளது. அது பற்றி பார்ப்போம்.
அடிப்படை வசதி இல்லை
ரிஷிவந்தியம் ஒன்றியம் சீர்பாதநல்லூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கடைகோடியில் இப்பள்ளி இருப்பதால் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என்பதை பள்ளிக்கு சென்று பார்த்த உடனேயே தெரிந்து விட்டது.
தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் கிராமப்புற அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் சேதமான பள்ளி கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆட்டுத்தொழுவமாகமாறிய வகுப்பறை
ஆனால் ஏனோ தெரியவில்லை, இங்குள்ள பள்ளி வகுப்பறைகள் முறையான பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. பள்ளி கட்டிடத்திலும், பள்ளி வளாகத்திலும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை கட்டி வருகின்றனர். இதனால் அரசு பள்ளிக்கூட வகுப்பறை ஆட்டு தொழுவமாக மாறி விட்டது.
ஆடு, மாடுகள் வெளியேற்றும் கழிவுகள் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லை இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தை சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்து புதர் போன்று காணப்படுவதால் அதில் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் வசித்து வருகின்றன. இதற்கு அஞ்சியே மாணவர்கள் பள்ளிக்கு வர அச்சம் அடைகின்றனர். மேலும் மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லும் பாதையில் வைக்கோல், புற்கட்டுகளை அடுக்கி வைத்துள்ளதால் அவர்கள் சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேய்ச்சலுக்கு விடுகிறார்கள்
பொதுவாக பள்ளிக்கூடத்தை பொறுத்தவரை தூய்மை, நல்ல காற்றோட்ட வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த அரசு பள்ளிக்கு அதிக அளவில் இடம் இருந்தும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. மேலும் பள்ளி வளாகத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்தும் வருகின்றனர். சுற்றுச்சுவர் இல்லாததால் வகுப்புகள் நடைபெறும் போது சிலர் ஆடு, மாடுகளை பள்ளி வளாகத்தில் மேய்ச்சலுக்கு விடுவதால் வகுப்புகள் நடைபெறும் பொழுது மாணவர்களின் கவனம் சிதறுவதாகவும் கூறப்படுகிறது.
மாணவர்களுக்கு தாகம் தணிக்க சிறிய குடிநீர் தொட்டி உள்ளது. தற்போது இந்த குடிநீர் தொட்டி காட்சி பொருளாகவே உள்ளது. அதில் குடிநீர் இல்லாததால் மாணவ-மாணவிகள் வெகுதூரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. எனவே போதிய அடிப்படை வசதிகளை செய்து பள்ளியை மேம்படுத்த வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மாணவர்களின் கோரிக்கை
எனவே மாணவர்களின் நலன் கருதியும், சுகாதாரத்தை கருத்தில் கொண்டும் பாழடைந்த கட்டிடத்திலும், வளாகத்திலும் ஆடு, மாடுகளை கட்டி வளர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும். பாழடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், பள்ளியை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள், மாணவ-மாணவிகள் கோாிக்கை விடுத்து வருகின்றனர்.