அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து; மற்றொரு மாணவன் கைது
களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்-2 மாணவரை கத்தியால் குத்திய மற்றொரு மாணவரை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்-2 மாணவரை கத்தியால் குத்திய மற்றொரு மாணவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
அரசு மேல்நிலைப்பள்ளி
நெல்லை மாவட்டம் களக்காட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு களக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 48 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
இந்த பள்ளியில் சமீபகாலமாக ஒருசில மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடந்து வந்தன.
கத்திக்குத்து
இந்த நிலையில் நேற்று மதியம் பள்ளியில் உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவரான களக்காடு அருகே புளியங்குளத்தை சேர்ந்த ஜெகன் என்பவரது மகன் இசைசெல்வன் (16) உணவருந்தி விட்டு, கைகழுவி கொண்டிருந்தார்.
திடீரென அவருக்கு பின்னால் வந்த மற்றொரு மாணவர் கத்தியால் இசைசெல்வனின் முதுகில் குத்தினார். பின்னர் அந்த மாணவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கத்திக்குத்தில் காயம் அடைந்த மாணவர் இசைசெல்வன் அலறினார். உடனிருந்த மற்ற மாணவர்கள் இதுபற்றி தலைமை ஆசிரியர் ராஜேஷ் பெல் மேனுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அவரும், மற்ற ஆசிரியர்களும், மாணவர்களும் படுகாயமடைந்த இசைசெல்வனை மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
உதவி சூப்பிரண்டு விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்ததும் நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி தலைமையில் களக்காடு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தப்பி ஓடிய மாணவரை போலீசார் கைது செய்தனர். எதற்காக இந்த மோதல் நடந்தது? கத்திக்குத்துக்கு காரணம் என்ன? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளியில் மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் களக்காடு பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.