25 இடங்களில் புதிய மணல்குவாரிகள் திறக்க அரசு அனுமதி

மணல் தட்டுப்பாட்டை போக்க 25 இடங்களில் புதிய மணல்குவாரிகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்

Update: 2023-05-07 18:45 GMT

மணல் தட்டுப்பாட்டை போக்க 25 இடங்களில் புதிய மணல்குவாரிகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசின் இரு ஆண்டு சாதனை மலர் வெளியீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துக்கொண்டு சாதனை மலரை வெளியிட்டு ஆயிரத்து 466 பயனாளிகளுக்கு ரூ. 7 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள் 60 பேருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள், 8 டிராக்டர், மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

புதிய கலெக்டர் அலுவலகம்

பின்னர் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு மயிலாடுதுறையில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் 7 மாடிகொண்ட அனைத்து வசதிகளுடன் கூடிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி நடந்து வருகிறது. ரூ. 24 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

அரசு ஆஸ்பத்திரியில் ரூ.46 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. பூம்புகார் சுற்றுலா மையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி பகுதியில் கரையை பலப்படுத்தும் பணிகளும், புயல்பாதுகாப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. மயிலாடுதுறையில் புதிய மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

புதிய மணல் குவாரிகள்

மயிலாடுதுறை நகரில் பாதாளசாக்கடை பிரச்சினை தீர்வுகான ரூ. 99 கோடி மதிப்பீட்டில் திட்டமதிப்பீடு தயார்செய்யப்பட்டுள்ளது. கட்டுமானபணிகளுக்கு மணல் தட்டுப்பாட்டை போக்குவதற்கு 25 இடங்களில் புதிதாக மணல்குவாரிகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

உள்கட்டமைப்பை மேம்படுத்த மணல் அவசியம் தேவைப்படுவதால் அதனடிப்படையில் தேவைக்கு ஏற்ப பொதுப்பணித்துறை மூலமாகத்தான் மணல்குவாரிகள் திறக்கபட உள்ளது என்றார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஒன்றியக்குழு தலைவர்கள் காமாட்சிமூர்த்தி, மகேந்திரன், கமலஜோதி, சீர்காழி நகரசபை தலைவர் துர்காபரமேஸ்வரி, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணாசங்கரி உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்