அரசு ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வேலைநிறுத்த போராட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இதன் காரணமாக அரசு அலுவலர்கள் பலர் பணிக்கு வராததால் தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் பணியாளர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதனால் பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசு அலுவலகங்களுக்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தர படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு வழங்கும் பணியை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடத்த வேண்டும். அரசு துறைகளில் 4½ லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.
ஆரணி
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக ஆரணி வட்டக்கிளை தலைவர் இல.பாஸ்கரன் தலைமையில் ஆரணி ஊராட்சி ஒன்றியம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம், ஆரணி தாலுகா அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வேளாண்துறை அலுவலகம் ஆகிய 5 அலுவலகங்களில் அரசுக்கு கவனஈர்ப்பு செய்யும் வகையில் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது.
ஆரணி தாலுகா அலுவலகத்தில் இ-சேவை மையம் மட்டுமே செயல்பட்டது.
ஆரணி தாலுகா அலுவலகம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வேளாண்துறை அலுவலகத்திலும் அலுவலர்கள் யாரும் பணியில் இல்லாததால் விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் பலரும் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதனால் அரசு அலுவலகத்தில் அனைத்து பணிகளும் முடங்கின.