அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் -அண்ணாமலை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-12-23 18:52 GMT

சென்னை,

கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு வாக்களித்த பொதுமக்களை வஞ்சித்து வரும் இந்த திறனற்ற தி.மு.க. அரசு, அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கூட விட்டு வைப்பதாக இல்லை.

ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மறந்திருக்கலாம். பொதுமக்கள் இன்னும் மறக்கவில்லை.

2021-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 60 ஆயிரம். பதிவு செய்தோரில் வெறும் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கள்ள மவுனம்

2023-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. வழங்கிய அட்டவணையின்படி வெறும் 1,752 பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத சூழலே நிலவி வருகிறது.

விளம்பரங்களை மட்டுமே தேடி செல்லும் இந்த திறனற்ற தி.மு.க. அரசு முதலீடுகளை ஈர்ப்பதில் எந்தவித ஆர்வமும் காட்டுவதாக தெரியவில்லை தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததால் மக்களை மறந்துவிட்டார் முதல்-அமைச்சர்.

பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த முடியுமா, முடியாதா? என்ற எந்த புரிதலும் இல்லாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்குடன் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்கிறார் திறனற்ற தி.மு.க. அரசின் நிதி அமைச்சர். அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 1.1.2022 அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை 1.7.2022 என காலம் தாழ்த்தி வழங்கியது தமிழக அரசு. ஆனால் 6 மாத காலம் தாழ்த்தியதற்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவை தொகையை இப்போது வரை வழங்கவில்லை. மேலும் 1.7.2022 வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடாமல் கள்ள மவுனம் சாதிக்கிறது திறனற்ற தி.மு.க. அரசு.

பொய்யான பிம்பம்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள் கட்டமைப்பை மேம்படுத்த செலவு செய்யாமல் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வும், நிலுவை பாக்கியும் வழங்காமல் ஆண்டின் இறுதியில் நிதி பற்றாக்குறையை குறைத்துவிட்டோம் என்று பொய்யான பிம்பத்தை கட்டமைக்க நீங்கள் பாடுபட்டு வருகிறீர்கள். மக்களை நீண்ட நாட்களுக்கு ஏமாற்ற முடியாது என்பதை தி.மு.க. உணர வேண்டும். நீங்கள் உணரவில்லை எனில் கடந்த காலத்தில் மக்கள் தங்களுக்கு உணர்த்தியதை போல் மீண்டும் உணர்த்துவார்கள்.

இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவை தொகையை உடனடியாக தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்று மிக பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்