மாணவர்களுக்கு புத்தகம், சீருடை கட்டணத்தை வழங்குவது அரசின் கடமை -ஐகோர்ட்டு உத்தரவு

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவருக்கான சீருடை, பாட புத்தகங்களுக்கான கட்டணங்களையும் வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-05-20 23:01 GMT

சென்னை,

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், ஒரு மாணவனிடம் சீருடை, பாட புத்தகங்களுக்காக ரூ.11 ஆயிரம் செலுத்த பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம், மாணவனின் பெற்றோர் முறையிட்டனர். இதையடுத்து, அந்த மாணவனுக்கு எந்த கட்டணமும் வாங்காமல், படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

இதன்படி மாணவன் வகுப்புக்கு செல்ல அனுமதித்தாலும், அவருக்கு பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அந்த மாணவனின் தந்தை மகாராஜா, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அரசின் கடமை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களின் கல்விக்கட்டணம் மட்டுமல்லாமல் கல்வி கற்கத் தேவையான பொருட்களுக்கான கட்டணத்தையும் மாநில அரசே ஏற்க வேண்டும்.

அதன்படி, இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவருக்கான சீருடை, பாட புத்தகங்களுக்கான கட்டணங்களை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை ஆகும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் அனைத்து மாணவர்களுக்கான செலவுகளை அரசு, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.

வழங்க வேண்டும்

இதுசம்பந்தமாக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை 2 வாரத்துக்குள் பள்ளிக்கல்வித்துறை பிறப்பிக்க வேண்டும். 25 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது. மாநில அரசிடம் தான் அந்த தொகையை தனியார் பள்ளிகள் பெற்றுக்கொள்ள வேண்டும். மனுதாரரின் மகனுக்கு தேவையான சீருடை, பாட புத்தகங்களை உடனடியாக வழங்க வேண்டும். இதற்கான தொகையை அரசிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்