29-ந்தேதி முதல் அரசு டாக்டர்கள் போராட்டம்

காலியாக உள்ள 1000 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி 29-ந்தேதி முதல் அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தப்படும் என அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் பேட்டி அளித்தார்.

Update: 2023-05-12 19:54 GMT

காலியாக உள்ள 1000 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி 29-ந்தேதி முதல் அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தப்படும் என அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் பேட்டி அளித்தார்.

பதவி உயர்வு அரசாணை

மதுரையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கடந்த 2017-ல் இருந்து ஊதியம் மற்றும் பதவி உயர்வுக்காக போராடி வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் பல கட்ட போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தியும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. 2021 ஜூன் 18-ந் தேதி முதல்-அமைச்சர் அரசு மருத்துவர்களுக்கான பதவி உயர்வு தொடர்பான அரசாணை 293-ஐ அமல்படுத்துவோம் என்று ெதரிவித்தார். அரசாணையால் தங்களுக்கு பயன் இல்லை என சில மருத்துவர்கள் எதிர்த்தனர்..

அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி அரசாணை 293-ஐ மட்டுமே செயல்படுத்த முடியும் என தெரிவித்தார். எங்களின் விருப்பத்தின் பேரில் அரசாணை 293-ஐ அமல்படுத்தலாம் என அமைச்சர் கூறினார். ஆனால் தற்போது வரை அரசாணை நடைமுறைப்படுத்தவில்லை.எனவே தமிழக முதல்-அமைச்சர் தலையிட்டு 16 ஆயிரம் மருத்துவர்கள் பயன்பெறக்கூடிய அரசாணை 293-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் 2,600 பேராசிரியர்களில் 1,000 பேராசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்கப்படவில்லை.

காலியாக உள்ள பணியிடங்கள்

அரசு மருத்துவக்கல்லூரிகளில் காலியாக உள்ள 450 பேராசிரியர் பணியிடங்களையும், 550 இணை பேராசிரியர்கள் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். இல்லையென்றால் வரும் காலங்களில் அரசு கல்லூரிகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.

கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ந் தேதி முதல் அரசு டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதுவரை நோயாளிகள் பாதிக்காத வண்ணம் போராட்டங்கள் நடத்தி உள்ளோம். தற்போது தமிழக அரசு நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகும் படி போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளி உள்ளது. உயிரை காக்கும் அவசர சிகிச்சை பணிகளை தொடர்ந்து செய்வோம்.

29-ந் தேதி போராட்டம்

மேலும் சுப்ரீம்கோர்ட்டு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமை உள்ளது என தெரிவித்துள்ளது. எனவே வருகிற 14-ந் தேதி நடைபெறும் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் மே 29-ந்தேதி முதல் நடத்தவுள்ள போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும். மேலும் நாங்கள் நடத்திய போராட்டங்கள் அமைச்சரின் வாக்குறுதியை கேட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், காலதாமதப்படுத்தாமல் உடனடியாக எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால் அடுத்து நடத்தும் போராட்டம் நோயாளிகளை பாதிக்கும் அளவில் இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் இளமாறன், குமரதேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்