கல்லூரி பேராசிரியர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் இறந்த கல்லூரி பேராசிரியர் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்காததால் செய்யாறில் அரசு பஸ் செய்யப்பட்டது.;

Update: 2022-09-22 16:31 GMT

செய்யாறு

விபத்தில் இறந்த கல்லூரி பேராசிரியர் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்காததால் செய்யாறில் அரசு பஸ் செய்யப்பட்டது.

கல்லூரி பேராசிரியர்

செய்யாறு ஜீவா நகரில் வசித்து வந்தவர் தமிழ்வாணன் (வயது 46), கல்லூரி பேராசிரியர். செய்யாறு அரசு கல்லூரியில் பணியாற்றி வந்த இவர் சென்னையில் உள்ள பிரசிடன்சி கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.

கடந்த 3.10.2005 அன்று கல்லூரிக்கு செல்வதற்காக செய்யாறு பஸ் நிலையத்தில் சென்னை செல்லும் அரசு பஸ்சில் ஏறியுள்ளார். அதற்குள் பஸ் திடீரென இயக்கப்பட்டதால் பஸ்சில் இருந்து கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த விபத்து குறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நஷ்ட ஈடு

இந்த நிலையில், தமிழ்வாணனின் மனைவி கலைவாணி, அவரது சிறு வயது மகன்கள் 2 பேர் மற்றும் அவரது பெற்றோர் என 5 பேர் நஷ்டஈடு வழங்கக் கோரி செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி நஷ்டஈட்டுத் தொகையினை வழங்க தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மண்டலத்திற்கு 30.1.2017 அன்று உத்தரவிட்டார்.

ஆனால் போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்கவில்லை. இதையடுத்து நஷ்டஈடு தொகையை பெறுவதற்காக பேராசிரியர் குடும்பத்தினர் மீண்டும் நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த சார்பு நீதிபதி நஷ்டஈடு தொகையும், அதற்குண்டான வட்டியும் சேர்ந்து ரூ.68½ லட்சத்தை மனுதாரர் குடும்பத்திற்கு வழங்க 20.11.2019 அன்று உத்தரவிட்டார்.

அரசு பஸ் ஜப்தி

அந்த மனுவின் பேரில் போக்குவரத்துத்துறையினர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த நிலையில், மனுதாரர் குடும்பத்திற்கு 5 தவணைகளாக ரூ.54 லட்சத்து 85 லட்சத்தை செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் செலுத்தியிருந்தனர்.

மீதமுள்ள நஷ்டஈடு தொகை மற்றும் அதற்குண்டான வட்டியும் சேர்த்து செலுத்த தவறியக் காரணத்தால் செய்யாறு சார்பு நீதிபதி குமரகுருபரன் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

அதன்பேரில், காஞ்சீபுரத்தில் இருந்து சேலத்திற்கு செய்யாறு வழியாக பயணிகளுடன் வந்த அரசு பஸ்சை செய்யாறு பஸ் நிலையத்தில் கோர்ட்டு அமீனா ஜப்தி செய்து சார்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்