மாணவர்கள் சேர்க்கை 3-ம் கட்ட கலந்தாய்வு
மாணவர்கள் சேர்க்கை 3-ம் கட்ட கலந்தாய்வு
முத்தூர்,
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சே.ப.நசீம் ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
காங்கயம் அரசு கலைக்கல்லூரியில் 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான பி.ஏ.தமிழ், பி.ஏ.ஆங்கிலம், பி.பி.ஏ. பி.ஏ.பொருளாதாரம், பி.காம், பி.எஸ்சி.கணிதம், பி.எஸ்சி.கணினி அறிவியல் ஆகிய 7 பாட பிரிவுகள் அடங்கிய இளங்கலை மற்றும் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான 3-ம் கட்ட மாணவ-மாணவிகள் சேர்க்கை நேரடி கலந்தாய்வு வருகிற 22-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இதன்படி முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் சேர்க்கை 3-ம் கட்ட கலந்தாய்வில் தமிழக அரசு உயர் கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் உத்தரவின்படி பி.சி, எம்.பி.சி, எஸ்.சி.ஏ, பி.சி.எம் ஆகியோர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பூர்த்தி செய்யப்படாத இடங்களுக்கு சேர்க்கை அனுமதி வழங்கப்படும். ஏற்கனவே நடைபெற்ற 2 கலந்தாய்வுகளில் மொத்தம் உள்ள 340 இடங்களுக்கு 211 மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கை அனுமதி ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த கல்லூரியில் பயில ஏற்கனவே விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகள் தங்களது ஆதார் அட்டை மற்றும் நகல், எஸ்.எஸ். எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 மாற்றுசான்றிதழ், மதிப்பெண்கள் பட்டியல், சாதி சான்றிதழ், 6 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்பம் நகல் ஆகியவற்றுடன் வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கல்லூரிக்கு நேரில் வந்து கலந்தாய்வில் கலந்து கொண்டு சேர்க்கை பெற்று பயன் அடைய முன் வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
----