நெல்லையில் அரசுப்பேருந்து ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம்

மர்ம நபர்களை கைதுசெய்யும் வரை பேருந்துகளை இயக்கமாட்டோம் எனக்கூறி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

Update: 2023-11-16 02:57 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசத்தில் இருந்து நெல்லை புதிய பேருந்து நிலையம் நோக்கி நேற்று மாலை அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தை ரெஜி என்பவர் ஓட்டியுள்ளார். கண்ணன் என்பவர் நடத்துநராக இருந்துள்ளார்.

பேருந்து கல்லிடைக்குறிச்சியை தாண்டி சென்றுகொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்துள்ளனர். அவர்களில் 2 பேர் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது பேருந்து ஓட்டுநருக்கும், பைக்கை ஓட்டி வந்தவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பேருந்து வீரவநல்லூர் பேருந்து நிறுத்தம் சென்றபோது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த அந்த நபர், பேருந்து ஓட்டுநர் ரெஜியை சரமாரியாக அரிவாளால் முகத்தில் வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த நடத்துநர் கண்ணனையும் மர்மநபர் தாக்கியதால், அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதனை தொடர்ந்து, ஓட்டுநர், நடத்துநர் இருவரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்தும், மர்ம நபர்களை கைதுசெய்யும் வரை பேருந்துகளை இயக்கமாட்டோம் என்றும் கூறி பாபநாசம் பணிமனையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால், அப்பகுதியில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. போக்குவரத்து கழக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 

 

Tags:    

மேலும் செய்திகள்