விக்கிரவாண்டி அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்; 6 பேர் காயம்
விக்கிரவாண்டி அருகே லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.
விக்கிரவாண்டி,
லாரி மீது மோதியது
சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி நேற்று முன்தினம் அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை தி்ண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தன்னம்பட்டியை சேர்ந்த வெங்கடாஜலபதி (வயது 43) என்பவர் ஓட்டினார்.
நேற்று முன்தினம் இரவு 12.30 மணி அளவில் விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது.
6 பேர் காயம்
இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் பஸ்சில் பயணம் செய்த வெங்கடாஜலபதி, திண்டுக்கல்லை சேர்ந்த மணிவேல் (31), நந்தவனபட்டியை சேர்ந்த பாஸ்கர் (72), காமேஸ்வரி (36), சீர்காழியை சேர்ந்த திருஞானஅருள் (63), திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்த காசிநாதன் (40) ஆகிய 6 போ் பலத்த காயம் அடைந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்துக்குள்ளான பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இது குறித்த புகரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.