லாரி மீது அரசு பஸ் மோதல்; கண்டக்டர் பலி

மயிலம் அருகே லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கண்டக்டர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-07-27 20:43 GMT

மயிலம்,

சென்னை கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கொழை சாவடி குப்பம் பகுதியை சேர்ந்த இளையராஜா (வயது 42) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக நல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (45) என்பவர் பணியில் இருந்தார். மயிலம் அருகே கேணிப்பட்டு என்ற இடத்தில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி சக்கரத்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் அந்த லாரி மிதமான வேகத்தில் சென்றது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் அந்த லாரி மீது பஸ் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் வெங்கடேசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ்சில் பயணம் செய்த விருத்தாசலம் பகுதியை சேர்ந்த பயணிகளான தலாஹிர் அஹமது (35), உன்னலட்சுமி (42) உள்பட 9 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்