சமயபுரம் அருகே கார் மீது அரசு பஸ் மோதல்; ஒருவர் பலி
சமயபுரம் அருகே கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த 5 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சாமி தரிசனம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள தானிப்பாடி போந்தை ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 53). இவர் தனது மனைவி சுமதி (47), மகன் அருள்முருகன் (33), மருமகள் மல்லிகா (32), ேபரன்கள் தினேஷ் (15), சரவணன் (13) மற்றும் உறவினர் அண்ணாமலை (50) ஆகியோருடன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் ஒரு காரில் ராணிப்பாடியிலிருந்து திருச்செந்தூருக்கு சென்றனர்.
இதையடுத்து, அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் காரில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை அருள்முருகன் ஓட்டினார்.
ஒருவர் பலி
நேற்று அதிகாலை 4 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் பெருவளை வாய்க்கால் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் கார் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்கால் பாலத்தின் கட்டையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் அருள்முருகன், சுமதி, மல்லிகா, தினேஷ், அண்ணாமலை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சரவணன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கைது
இதையடுத்து, சமயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் தென்காசி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த ஜெயக்குமார் சரவணனை (44) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.