பூந்தமல்லி அருகே பொக்லைன் எந்திரம் மீது அரசு பஸ் மோதல்
பூந்தமல்லி அருகே பொக்லைன் எந்திரம் மீது அரசு பஸ் மோதல் 13 பேர் காயம் அடைந்தனர்.;
சென்னை கோயம்பேட்டில் இருந்து ஓசூர் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று அதிகாலை 4 மணி அளவில் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ஜெகன் (வயது 40) என்பவர் ஓட்டினார்.
பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக பொக்லைன் எந்திரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. எதிர்பாராதவிதமாக பொக்லைன் எந்திரத்தின் மீது அரசு பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியதுடன், முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் டிரைவர் ஜெகன், பஸ்சில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உள்பட 13 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று திரும்பினார்கள். மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு மற்ற பயணிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். இது குறித்து ஆவடி போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.