'முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கைகள் நிறைவேற உறுதுணையாக இருப்பேன்' கவர்னர் பேச்சு

‘முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கைகள் நிறைவேற உறுதுணையாக இருப்பேன்' என கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

Update: 2023-05-21 18:57 GMT

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். பணிக்கு படித்து வருபவர்கள், சாதனையாளர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை அழைத்து 'எண்ணித்துணிக' என்ற தலைப்பில் அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

அதன்படி நேற்று முன்னாள் ராணுவ வீரர்கள், கடற்படை, விமானப்படையைச் சேர்ந்தவர்கள் மற்றும் போரின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் சென்னை ராஜ்பவனில் கலந்துரையாடினார். அப்போது அவர், பணியின் போது வீர தீர செயல்புரிந்த முன்னாள் படை வீரர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து கவர்னர் பேசியதாவது:-

எந்த தவறும் செய்வதில்லை

தமிழகத்தில் 2 லட்சம் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் உள்ளனர். ராணுவ வீரர்கள் ஓய்வுக்கு பின் அவர்களுக்கு தேவையான வசதிகள் வழங்கப்படாமல் இருந்தாலும் மோசமான செயல்பாடுகளில் ஈடுபடுவது இல்லை. ராணுவ வீரர்கள் எந்த ஒரு தவறும் செய்வதில்லை. ஓய்வுபெற்ற பின்பும், எங்கேனும் பிரச்சினை என்றால் அதை தடுத்து வருகின்றனர்.

போரின் போது தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் பலர் தங்களது இன்னுயிரை ஈந்துள்ளனர். அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்களோ அங்குள்ள பள்ளியில் ராணுவ வீரர்களின் புகைப்படத்தை வைத்து அவர் எந்த போரில் உயிரிழந்தார் என்பது குறித்தும், அவரது வீர தீர செயல் குறித்தும் வைக்கப்பட வேண்டும்.

உறுதுணையாக இருப்பேன்

அவர் உயிரிழந்த தினத்தன்று அந்த பகுதியில் உள்ள மக்களை அழைத்து, மரியாதை செலுத்த வேண்டும். இந்த நாட்டின் விலைமதிக்க முடியாத சொத்தாக ராணுவ வீரர்கள் உள்ளனர்.

இதன் காரணமாகவே நான், தமிழகத்தில் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் முன்னாள் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டு வருகிறேன். முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசின் பாதுகாப்புத்துறை மந்திரிக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன். தொடர்ந்து அவர்களது கோரிக்கைகள் நிறைவேற உறுதுணையாக இருப்பேன்.

குடும்பமாக செயல்பட வேண்டும்

ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மிகவும் கவுரவமாக நடத்தப்பட வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் மாவட்டம் மற்றும் வட்டார அளவில் வாட்ஸ்-அப் குழு அமைத்து குடும்பமாக செயல்பட வேண்டும்.

அந்த குழுவில் உங்கள் பிரச்சினைகள் மட்டும் இல்லாமல் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தலாம். அவ்வாறு குழு அமைத்து நீங்கள் தெரிவித்தால் உங்கள் குரல் வெளியே கேட்கும்.

இவ்வாறு கவர்னர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் தியாகராஜன், முரளி, சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்