தமிழக சட்டசபையில் இருந்து கவர்னர் பாதியிலேயே வெளியேறியது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல்-கி.வீரமணி பேட்டி

தமிழக சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளியேறியது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

Update: 2023-01-09 21:07 GMT

அவமதிக்கும் செயல்

சேலத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் முதல்நாளில் படிக்க வேண்டிய உரையை படிக்கமால் கவர்னர் ஆர்.என்.ரவி. பாதியிலேயே வெளியேறியது ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துவதுடன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். மேலும் அவர் தனது கடமையில் இருந்து தவறிய அரசு ஊழியர் என்ற குற்றத்திற்கு ஆளாகி உள்ளார்.

தமிழக சட்டசபையில் அமைச்சரவையால் தயாரிக்கப்பட்டு கவர்னர் படிப்பதற்கு முன்பாகவே அனுப்பப்படும். இதில் அவருக்கு ஆட்சேபனை இருந்தால் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் முடிவு செய்யப்படும். ஆனால் உரையை விட்டுவிட்டு படிப்பது என்பது தவறானது. மேலும் இது அரசை அவமதிக்கும் செயல் ஆகும்.

மோதல் போக்கை...

சொந்த கருத்துகளை படிப்பதற்கோ, நீக்குவதற்கோ அரசியலமைப்பு சட்டத்தில் அவருக்கு உரிமை கிடையாது. எனவே அரசியலமைப்பு சட்டத்தை மீறியது அவமதிப்பு செயல். சட்டசபையில் இது போன்று மோசமாக நடந்து கொண்ட கவர்னர் கிடையாது. 5 ஆண்டுகளுக்கு இந்த அரசு நீடிக்க கூடாது, மோதல் போக்கை உருவாக்கக் வேண்டும் என்பது தான் கவர்னருடைய நோக்கம் ஆகும்.மக்களின் வரிப்பணத்தில் செயல்பட்டு வரும் அவருக்கு, வேறு விதமான எண்ணம் இருந்தால் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அண்ணாமலை இருக்கும்பதவிக்கு வேண்டுமென்றால் செல்லலாம்.

மக்கள் இயக்கம்

கவர்னர் செய்த செயலுக்கு மக்கள் போராட்டம் வெடிக்கும். தமிழக முதல்-அமைச்சர் தெளிவான தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார். கவர்னரை இனிமேல் இங்கு அனுமதிக்க கூடாது.

கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும். கவர்னர் வெளியேற வேண்டும், இல்லையெனில் வெளியேற்றுவதற்கான மக்கள் இயக்கம் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்