'அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை கவர்னர் காப்பாற்ற நினைக்கிறார்' - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

கவர்னர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு மட்டுமே வந்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.;

Update: 2023-07-06 15:02 GMT

புதுக்கோட்டை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், இது குறித்து கவர்னர் மாளிகையில் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "பி.வி. ரமணா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சி.பி.ஐ.யின் விசாரணையில் உள்ளது. கே.சி. வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை அறிக்கை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும், எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை" என்று கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் குறித்த புகாருக்கு முறையான பதிலைத் தராமல் மலுப்பலான பதிலை கவர்னர் அளித்துள்ளதாகவும், கவர்னர் ஆர்.என்.ரவி, அ.தி.மு.க.வின் 2 முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற நினைக்கிறார் என்று தெரிவித்தார். மேலும் தான் அனுப்பிய கடிதத்திற்கு கவர்னர் பதில் கடிதம் அனுப்பவில்லை என்றும், கவர்னர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு மட்டுமே வந்துள்ளதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்