"வெளிநாடு முதலீடுகள் விவகாரத்தில் உண்மை தன்மையை தெரிந்து கவர்னர் பேச வேண்டும்" - அமைச்சர் பொன்முடி கண்டனம்
வெளிநாடு முதலீடுகள் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி கருத்துக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
வெளிநாடு முதலீடுகள் விவகாரத்தில் உண்மை தன்மையை தெரிந்து கவர்னர் பேச வேண்டும், பேப்பரையாவது கவர்னர் படிக்க வேண்டும். அரசியல்வாதி போன்றும், எதிர்கட்சிகள் போன்றும் பேசுவது வருந்தத்தக்கது. துணைவேந்தர்களை அழைத்து அரசியல் பேசுவதற்காகவே கவர்னர் ஊட்டிக்கு சென்றிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பாஜகவை ஏற்பவர்கள் இல்லை. அதனால் தான் ஆளுநர் மூலமாக கொண்டு வருவதற்கு முயற்சியை செய்கிறார்கள். வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டிக்கு சென்றுள்ளார், அவர் ஊட்டிக்கு சென்ற பிறகு சென்னையில் மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் கல்வித்தரம் குறைந்துவிட்டது கவர்னர் என்று கூறுகிறார். கவர்னர் எத்தனை கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் கல்வி தரம் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் முன்னேறி உள்ளன.
தமிழகத்தில் கல்வி தரம் குறைந்துவிட்டதாக கவர்னர் ஆர்.என்.ரவி கூறுவது முரணாக உள்ளது. புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசியல் செய்யும் நோக்கத்தோடு கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசி வருகிறார். கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக கல்வித்துறையில் அரசியலை புகுத்த முயற்சிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.