திராவிடம் என்பது இடம் சார்ந்தது மட்டுமே கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு

ஆங்கிலேயர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார்கள் என்றும், திராவிடம் என்பது இடம் சார்ந்தது மட்டுமே என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

Update: 2022-07-10 21:00 GMT

வேலூர்,

சிப்பாய் புரட்சி தினத்தையொட்டி வேலூர் கோட்டையில் உள்ள நினைவு தூணுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து முன்னாள் ராணுவவீரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களுடன் கவர்னர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி பேசியதாவது:-

தேசம் தழுவிய போராட்டம்

வேலூரில் நடந்த புரட்சியை ஆங்கிலேயர்கள் கலகம் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் நான் இதை ஆங்கிலேயர்களை விரட்ட ஏற்பட்ட புரட்சியாக கருதுகிறேன். சிப்பாய் புரட்சியில் இந்திய வீரர்கள் சாதி, மதத்தை கடந்து போராடியுள்ளனர்.

வேலூர் சிப்பாய் புரட்சி ஒரு தேசம் தழுவிய போராட்டம். புரட்சி தொடங்கிய அன்றே சுதந்திர போராட்டம் தொடங்கியது. 1806-ம் ஆண்டு சிப்பாய் புரட்சி தான் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம்.

திராவிடம் இடம் சார்ந்தது...

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னே நாம் கல்வியில் சிறந்து விளங்கினோம். இந்தியாவை பல ராஜாக்கள் ஆண்டபோதும் ஒரே குடும்பமாக இருந்தோம். ஆங்கிலேயர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார்கள். விந்தியமலையை அடிப்படையாக வைத்து வடக்கில் உள்ளவர்களை ஆரியர்கள் என்றும், தெற்கில் உள்ளவர்களை திராவிடர்கள் என்றும் கூறினர்.

ஒருங்கிணைந்த மராட்டியம், ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளும் திராவிடமாக இருந்தது. திராவிடம் என்பது இடம் சார்ந்தது மட்டுமே.

தற்போது நாடு முன்னேற்ற பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியா சமமாக வளராமல் ஏற்றத்தாழ்வுடன் வளர்ந்துள்ளது. தமிழகம் மற்ற விகிதாச்சாரத்தில் பின்தங்கி இருந்தாலும் கூட கல்வி சேர்க்கை விகிதத்தில் முன்னோடி மாநிலமாக உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் பின் தங்கியும், ஒரு சில மாவட்டங்கள் மேலோங்கியும் உள்ளது அதனை சமம் செய்ய வேண்டும்.

சூப்பர் பவர் நாடு

இன்றைய சூழலில் உலகநாடுகள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் சூப்பர் பவர் நாடாக இந்தியாவை பார்க்கின்றன. இதற்கு உதாரணம் கொரோனா தொற்று காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் 150 நாடுகளுக்கு வழங்கினோம். தற்போது இந்தியாவின் மீதான உலகின் பார்வை முற்றிலும் மாறி உள்ளது. வெளிநாடுகளில் நாம் இந்தியர் என்ற பெருமையோடு நடக்கலாம். இந்திய பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவர் மீதான பார்வையிலேயே தெரியும்.

நமது நாடு 100-வது சுதந்திர தினத்தில் உலகை ஆளும் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே பிரதமரின் கனவு. வேலூர் மாவட்டத்தில் இருந்து இந்தியாவின் ராணுவத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களை அர்ப்பணித்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வானமே எல்லை என்ற நிலை உள்ளது. எனவே இளைஞர்கள் நாட்டிற்காக பாடுபட வேண்டும்.

இவ்வாறு கவர்னர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்