கோவை
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக நேற்று கோவை வந்தார். அவரை கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
வரவேற்பு
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனது நண்பரை சந்திப்பதற்காகவும், கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வும் 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் கோவை வந்தார்.
அவரை கோவை விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் அவர் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனது நண்பரை சந்திக்க காரில் புறப்பட்டு சென்றார். எனவே கோவை-பாலக்காடு சாலையில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பட்டமளிப்பு விழா
கவர்னர் ஆர்.என்.ரவி பாலக்காட்டில் உள்ள தனது நண்பரை சந்தித்து விட்டு இரவு மீண்டும் கோவைக்கு வந்தார். அவர் கோவை அரசு விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வு எடுத்தார்.
கவர்னர் ஆர்.என்.ரவி, இன்று (சனிக்கிழமை) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் மாணவ- மாணவி களுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார்.
பட்டமளிப்பு விழா முடிந்ததும் கவர்னர் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார். அங்கு அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.
அவர் மதியம் 3 மணி அளவில் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். கவர்னரின் 2 நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கவர்னர் செல்லும் சாலைகள், அரசு விருந்தினர் மாளிகை, விழா நடைபெறும் கல்லூரி ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.