செயல்பாடுகள் தெளிவற்று இருப்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும் - கி.வீரமணி பேட்டி

செயல்பாடுகள் தெளிவற்று இருப்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கி.வீரமணி கூறினார்.;

Update:2023-07-02 01:47 IST

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் திராவிடர் கழகம் சார்பில் 44-ம் ஆண்டு பெரியாரியல் பயிற்சி பட்டறை கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது. இதில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழகத்தில் சிறப்பாக திராவிட மாடல் ஆட்சி நடைபெறக்கூடாது என்பதற்காகவே அனுப்பி வைக்கப்பட்டது போன்று தெரிகிறது. அவர் நடத்துவது ஒரு போட்டி அரசாங்கம் போன்று உள்ளது. அவர் பதவி பிரமாணம் எடுத்ததற்கு எதிராக நடந்து கொள்கிறார்.

தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறுகிறது. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் நிறைவேற்றுகின்ற மசோதாக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து அனுப்பாமல், 11 மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்துள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில், ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்த உடனேயே அவர் குற்றவாளி என்று கூற முடியாது. வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட பிறகுதான் ஒருவரது பதவியை பறிக்க முடியும். யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும்? என்பது முதல்-அமைச்சரின் தனிப்பட்ட உரிமை. இலாகா இல்லாத அமைச்சராக ராஜாஜி இருந்துள்ளார். அமைச்சரை டிஸ்மிஸ் செய்வதற்கு கவர்னருக்கு எந்த உரிமையும் கிடையாது.

இதனை அறிந்த அவர் 4 மணி நேரத்தில் உத்தரவை திரும்ப பெற்றுள்ளார். இதுபோன்று பல்வேறு நிகழ்வுகளிலும் கவர்னரின் செயல்பாடு தெளிவற்ற முறையில் இருப்பதால், அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது அவரை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்