'தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவியே காரணமாக இருந்து கொண்டிருக்கிறார்' - ப.சிதம்பரம்
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் இருப்பதற்கு காரணம் கவர்னர்தான் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.;

சென்னை,
தமிழகத்தில் கவர்னரே பல சர்ச்சைகளின் மையமாக இருப்பது ஏன்? என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர், 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
"1857-ல் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாத நிலை உள்ளது. இதற்கு கவர்னர்-அரசு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைதான் காரணம்.
தமிழகத்தில் கவர்னரே பல சர்ச்சைகளின் மையமாக இருப்பது ஏன்? மேலும் அவர்தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என்றும் சிலர் கூறுகின்றனர். நாட்டின் உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான தகவல் இது."
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.