கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை
குமரி மாவட்டத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தனி படகில் சென்று மரியாதை செலுத்தினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தனி படகில் சென்று மரியாதை செலுத்தினார்.
கவர்னர் வருகை
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தன் குடும்பத்தினருடன் குமரி மாவட்டம் வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர் அங்கிருந்து கார் மூலமாக மதியம் 1.25 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவரை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் மதிய உணவை முடித்து விட்டு அங்கேயே ஓய்வு எடுத்தார்.
அதன் பிறகு மாலை 4.20 மணிக்கு கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை பார்வையிட அவர் புறப்பட்டார். கார் மூலம் படகு தளத்துக்கு சென்று அங்கிருந்து தனி படகில் சென்றார். அங்கு 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் மாலை 5.10 மணிக்கு திருவள்ளுவர் சிலையில் இருந்து அதே படகில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் சென்று பார்வையிட்டார். அதன்பிறகு அங்கிருந்து கரை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி மீண்டும் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்தார்.
அதே சமயம் கவா்னரின் குடும்பத்தினர் மாலையில் சூரிய அஸ்தமன காட்சியை கடற்கரையில் நின்று பார்த்து ரசித்தனர்.
2-வது நாளாக...
இரவில் ஓய்வெடுத்த கவர்னர் ஆர்.என்.ரவி 2-வது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசிக்கிறார். அதன் பிறகு காலை 7 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்.
பின்னர் காலை 10.30 மணிக்கு விவேகானந்தா கேந்திரா செல்கிறார். அதன்பிறகு மீண்டும் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து விட்டு காா் மூலம் தூத்துக்குடிக்கு புறப்படுகிறார்.