'தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கும்'

கோத்தகிரி வனப்பகுதியில் சாலை அமைத்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கோவையில் அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

Update: 2023-05-03 19:30 GMT

கோவை

கோத்தகிரி வனப்பகுதியில் சாலை அமைத்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கோவையில் அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

அமைச்சர் ஆய்வு

கோவை, வால்பாறை பகுதியில் ஆய்வு செய்ய தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று காலை கோவை வந்தார். பின்னர் கோவையில் உள்ள வன உயர் பயிற்சியகத்தில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த வனத்துறையினர் பயன்படுத்தும் துப்பாக்கிகள் மற்றும் கருவிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், அங்கு பயிற்சி பெற்று வரும் வனத்துறை அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். இந்த பயிற்சியகத்தில் போதுமான வசதிகள் உள்ளதா என்றும் கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அதிகாரிகளுடன் ஆலோசனை

கோவை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்டு வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது, யானைகள் உயிரிழப்பை தடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளேன். வால்பாறை பகுதியில் சிறுத்தை தாக்கி ஒருவர் காயம் அடைந்தார். அங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளேன்.

தமிழகத்தில் உள்ள தெப்பக்காடு, கோழிகமுத்தி, சாடிவயல் ஆகிய பகுதியில் உள்ள யானைகள் முகாமுக்கு தேவையான நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி உள்ளார். தமிழகத்தில் யானைகள் அதிகமாக உயிரிழந்து வருவதாக புகார் கூறுகிறீர்கள்.

1,500 மின்கம்பங்களில் கம்பிவேலி

தமிழகத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 100 யானைகள் உயிரிழந்து வருகிறது. அதில் பெரும்பாலான யானைகள் இயற்கையாகவே உயிரிழந்து இருக்கிறது. மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தடுக்க, வனப்பகுதி அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சரிசெய்யப்பட்டு உள்ளது. மேலும் அந்தப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் யானைகள் உரசுவதை தடுக்க 1,500 மின்கம்பங்களில் கம்பிவேலி சுற்றப்பட்டு உள்ளது.

மேலும் கோவை மதுக்கரை அருகே யானைகள் ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கருவிகளை கொண்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க தற்போது பணிகள் நடந்து வருகிறது. இயற்கைக்கு மாறாக யானைகள் உயிரிழப்பு இருந்தால் அவற்றுக்கான காரணத்தை கண்டறிந்து தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிய நடவடிக்கை

யானைகளின் வலசைபாதையில் (வழிப்பாதை) உள்ள ஆக்கிரமிப்பை மீட்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் வழிப்பாதை எது என்பதை மிக கவனமாக கண்டறிய வேண்டும். அவ்வாறு கண்டறிந்த பின்னர் யானைகளின் வழிப்பாதையில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள வனப்பகுதியில் சாலை அமைத்து இருப்பது தவறானது ஆகும். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தவறு செய்தது யாராக இருந்தாலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் முதன்மை தலைமை வனபாதுகாவலர் சுப்ரத் முகபத்ரா, கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் சேவாசிங், கோவை மண்டல வனபாதுகாவலர் ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் ஆகியோர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்