அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் முழக்க போராட்டம்
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
8 மணி நேர வேலை உரிமையை பறிக்கும் தொழிலாளர் சட்ட திருத்தத்தை நிரந்தரமாக கைவிடக்கோரியும், திருச்சி மண்டல நிர்வாகத்தில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் குடும்பத்துடன் தொடர் முழக்கப்போராட்டம் நேற்று நடைபெற்றது. திருச்சி பெரியமிளகுபாறையில் உள்ள அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சம்மேளன துணை தலைவர் கண்ணன், சி.ஐ.டி.யு. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.