உளவுத்துறையை பலப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை- ஜி.கே.வாசன்

உளவுத்துறையை பலப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2022-10-31 19:46 GMT

உளவுத்துறையை பலப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என ஜி.கே.வாசன் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

பட்டுக்கோட்டையில் பழனியப்பா அறக்கட்டளை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், நாடிமுத்து பிள்ளை ஆகியோரின் நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கராஜன் தலைமையில் நடந்தது. நகர வர்த்தக சங்க கவுரவ தலைவர் நடராஜன் வரவேற்றார். முத்துராமலிங்க தேவர், நாடிமுத்து பிள்ளை ஆகியோருடைய உருவப் படங்களுக்கு, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், உதவித்தொகை மற்றும் பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சுரேஷ் மூப்பனார், விவசாய சங்க தலைவர் வீரசேனன், மாவட்ட தலைவர்கள் திருச்சி குணா, திருவாரூர் தினகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியை தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அபராதத்தை குறைக்க வேண்டும்

நாடிமுத்து பிள்ளைக்கு பட்டுக்கோட்டையில் அவரது நலன் விரும்பிகள் ஒன்று சேர்ந்து, வரும் மாதத்திலேயே உருவச் சிலையை அமைப்பதற்காக முடிவெடுத்துள்ளனர். அவர் பட்டுக்கோட்டைக்கு அந்த காலத்தில் பல்வேறு துறைகளில் செய்த பணிக்கு, இந்த காலத்தில் நன்றி தெரிவிப்பதற்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது.

விதிமீறலில் ஈடுபடும் மோட்டார் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது தேவைதான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அதே நேரத்தில் அதிகளவு அபராதம் விதிக்க கூடாது. அபராதம் குறைக்கப்பட வேண்டும். அபராதம் விதித்தால் மட்டும் போதாது, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மத்திய அமைச்சர்கள் அதிகம்பேர் தமிழகத்திற்கு வந்து அரசின் திட்டங்களை பார்த்து செல்வது வரவேற்கத்தக்கது.

உளவுத்துறையை பலப்படுத்த வேண்டும்

கோவை சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடந்து வருகிறது. இதில் விரைவில் உண்மை நிலை வெளியாகும். தமிழகத்தில் உளவுத்துறையின் பணி போதுமானதாக இல்லை. மக்களுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை. உளவுத்துறையை பலப்படுத்த வேண்டியது அரசினுடைய கடமையாகும். மக்களுடைய பாதுகாப்பில் அக்கறை கொண்டவனாக இதனை சொல்கிறேன்.

கோவையில் நடந்த சம்பவம் தொடர்பாக கவர்னர் தெரிவித்த கருத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மட்டுமே, அரசியலுக்காக அல்ல. தி.மு.க. பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால் எந்த ஒரு வாக்குறுதியையும் ஆக்கபூர்வமான முறையில் முழுமையாக நிறைவேற்றவில்லை.

மின் கட்டணம் உயர்வு

உதாரணமாக இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியவில்லை. சொன்னதை செய்யவில்லை. மக்கள் ஏமாந்த நிலையில் இருக்கும் போது, பொருளாதாரம் சிக்கலில் இருக்கும்போது முதல் கட்டமாக சொத்து வரியை உயர்த்தினார்கள்.

அதன் பின்னர் மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். வாக்களித்த மக்களுக்கு‌ எந்த பயனும் இல்லாத அளவிற்கு இந்த அரசு செயல்படுவது தான் உண்மை நிலை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்