விவசாயிகளிடம் காய்கறிகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
கூட்டுறவு அமைப்புகள் மூலம் விவசாயிகளிடம் காய்கறிகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு சந்தைகளில் உரிய விலை கிடைக்காததால் சாலைகளில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வியர்வை சிந்தி சாகுபடி செய்த பயிர்கள் யாருக்கும் பயனின்றி அழிக்கப்படுவது வேதனையளிக்கிறது.
கேரளத்தில் தக்காளி, வாழை, பாகற்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை அம்மாநில அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் அந்த காய்கறிகளை பயிரிடுவோருக்கு அனைத்து செலவுகளும் போக 20 சதவீதம் லாபம் கிடைக்க வகை செய்யப்பட்டிருக்கிறது. கேரளம் செய்ததை தமிழகமும் செய்திருந்தால் விவசாயிகள் விளைபொருட்களை சாலையில் கொட்ட வேண்டியிருந்திருக்காது. அத்துடன், பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் வறட்சி, மழை, அதிக விளைச்சல், விளைச்சல் இல்லாமை என எந்த சிக்கலாக இருந்தாலும் பாதிக்கப்படும் ஒரே பிரிவினர் விவசாயிகள் தான். அவர்களை அனைத்து பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.
கொள்முதல் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க காய்கறிகள்-பழங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கவும், அவற்றை கூட்டுறவு அமைப்புகள் மூலம் அரசே கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் விளைபொருட்கள் அதிகமாக விளையும் காலங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.