அரசாங்கம் சாதி, மதம் பார்க்கக்கூடாது. சனாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறு -மன்னார்குடி ஜீயர் பேட்டி
அரசாங்கம் சாதி, மதம் பார்க்கக்கூடாது. சனாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறு என்று மன்னார்குடி ஜீயர் தெரிவித்தார்.
அரசாங்கம் சாதி, மதம் பார்க்கக்கூடாது. சனாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறு என்று மன்னார்குடி ஜீயர் தெரிவித்தார்.
மன்னார்குடி ஜீயர்
இந்து எழுச்சி பேரவையின் 10-ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் திருச்சி ஸ்ரீரங்கம் வந்து இருந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு அரசாங்கம் அரசாங்கமாக இருக்கவேண்டும். இதை தவிர சாதி, மதம் பார்ப்பதை விட வேண்டும். சாதி, மத பேதமின்றி இருக்க வேண்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்திற்கு விரோதமாக பேசி உள்ளார். இது கண்டனத்துக்குரியது. இவர் வேற்று மதத்தை பற்றி பேசுவாரா?.
சனாதன தர்மம் கழுகு போன்றது. அதற்கு எதிராக பேசும் கும்பல் ஈசல் போன்றது. கழுகுக்கு இணையாக ஈசல் பறக்க நினைத்தால் அதன் சிறகுகள் கீழே விழுந்து எறும்புக்கு நேரும் நிலைதான் ஏற்படும் என்பது உறுதி.
தர்மத்திற்காக பாடுபட்டவர்கள்
நமது தர்மத்திற்கு விரோதமாக இருப்பவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். நாட்டின் மக்கள் தொகையில் 91 சதவீதம் பேர் இந்துக்கள் தான். இந்துக்களுக்கு விரோதமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த நாட்டில் இருக்கக் கூடாது.
தர்மத்திற்காக பாடுபட்டவர்கள் சில பேர், தர்மத்தின் பெயரைசொல்லி சம்பாதித்தவர் சில பேர். இவர்கள் தர்மத்தின் பெயரை சொல்லி சம்பாதிப்பவர்கள் என்பதை உறுதியாக சொல்லலாம். பகவத் ராமானுஜர் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே அனைவரையும் ஆலயப்பிரவேசம், கோவிலில் பூஜை செய்ய வைத்தார். தற்போது கர்நாடகாவில் பகவத் லேண்ட் என்று சொல்லக்கூடிய நம்மாழ்வார் சன்னதியில் தாழ்த்தப்பட்டவர்கள் தான் கோவில் பூஜை உள்ளிட்ட அனைத்து காரியங்களையும் செய்து வருகிறார்கள்.
சாதியை புகுத்த கூடாது
சனாதன தர்மம் என்பது எங்கள் தாய்க்கு இணையானது. அதுகுறித்து தவறாக பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு வடமாநில ஆச்சாரியார் தக்க பதிலடி கொடுத்துள்ளார். சனாதன தர்மம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி விலை நிர்ணயித்து வடமாநில சாமியார் பேசியுள்ளதை தவறு என சொல்ல மாட்டேன். சனாதனம் என்பது பழமையை குறிப்பது. அதன் நடைமுறைகளை மாற்றக்கூடாது. சனாதன தர்மத்துக்குள் சாதியை புகுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது இந்து எழுச்சி பேரவை சோழ மண்டல செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.