அரசு பள்ளி ஆசிரியையின் கணவர் சாவு
மோட்டார் சைக்கிளின் குறுக்கே நாய் பாய்ந்தது. இதில் அரசு பள்ளி ஆசிரியையின் கணவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மகன் காயம் அடைந்தார்.
மொரப்பூர்:-
மோட்டார் சைக்கிளின் குறுக்கே நாய் பாய்ந்தது. இதில் அரசு பள்ளி ஆசிரியையின் கணவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மகன் காயம் அடைந்தார்.
பள்ளிக்கூட ஆசிரியை
கடத்தூர் அருகே உள்ளது அய்யம்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் சென்னப்பன் (வயது 37). இவருக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவருடைய மனைவி சாந்தி அம்பாலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
சென்னப்பன், டியூஷனுக்கு சென்ற தன்னுடைய மகனை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு அய்யம்பட்டி ஆத்துப்பாலம் அருகே வந்தார். அப்போது நாய் ஒன்று மோட்டார் சைக்கிளின் குறுக்கே பாய்ந்தது. இதில் சென்னப்பனும், அவருடைய மகனும் தூக்கி வீசப்பட்டனர். நாய் அடிபடாமல் தப்பி ஓடியது.
பரிதாப சாவு
இதில் சென்னப்பனுக்கு தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருடைய மகனும் காயம் அடைந்தார். இருவரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சென்னப்பன் பரிதாபமாக இறந்தார். அவருடைய மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.