அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 9½ பவுன் நகை திருட்டு
காரியாபட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 9½ பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
காரியாபட்டி,
காரியாபட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 9½ பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
அரசு பள்ளி ஆசிரியர்
காரியாபட்டி என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 42). இவர் காரியாபட்டி அருகே உள்ள சாலை மறைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்ததால் ஆசிரியர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரபாண்டியம் கிராமத்திற்கு சென்றார்.
9½ பவுன் நகை திருட்டு
இதையடுத்து மீண்டும் பாண்டியராஜன் காரியாபட்டியில் உள்ள தன் வீட்டிற்கு வந்து மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 9½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பாண்டியராஜன் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.