அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை

அரசு பள்ளி கூட ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-29 18:45 GMT

கூடலூர்:  கூடலூரில், அரசு பள்ளி கூட ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விபத்தில் நண்பரின் கார் சேதம்

கூடலூர் ஹெல்த்கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் மாதன். இவரது மகன் பாலச்சந்தர் (வயது 43). இவர் அள்ளூர் வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது நண்பரின் காரை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான ஊட்டி அருகே உள்ள தாவலோரைக்கு சென்றார்.

பின்னர் அதே காரில் கூடலூருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது ஊட்டி பகுதியில் எதிரே வந்த லாரி மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் நண்பரின் கார் பலத்த சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி பாலச்சந்தர் உயிர் தப்பினார். பின்னர் சேதமடைந்த காரை மற்றொரு வாகனம் மூலம் மீட்டு கூடலூர் கொண்டு வந்தார்.

ஆசிரியர் தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் வெகு நேரமாகியும் பாலச்சந்தர் இருந்த அறை திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அவரது மனைவி கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் சேலையை கட்டி பாலச்சந்தர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பின்னர் அவரை கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, நண்பரின் கார் விபத்துக்குள்ளானதில் இருந்து பாலச்சந்தர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர், பணிக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதன்காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்