மரத்தடியில் பாடம் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்
வகுப்பறைகள் அலுவலகங்களாக மாறியதால் மரத்தடியில் பாடம் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் கச்சிராயப்பாளையம் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதியை சோ்ந்த ஏழை, எளிய 778 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் மொத்தம் 9 கட்டிடங்கள் உள்ளன. இதில் 6-ம் வகுப்புக்கு 3 அறைகள், 7-ம் வகுப்புக்கு 3 அறைகள், 8-ம் வகுப்புக்கு 4 அறைகள், 9-ம் வகுப்புக்கு 6 அறைகள், 10-ம் வகுப்புக்கு 8 அறைகள், 11-ம் வகுப்புக்கு 8 அறைகள், 12-ம் வகுப்புக்கு 8 அறைகள் என மொத்தம் 40 அறைகளில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இது தவிர ஆய்வகங்களுக்கு 6 அறைகள், தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலகத்துக்கு தலா ஒரு அறை, ஆசிரியர்களுக்கு 3 அறைகள் உள்ளன. இத்தனை அறைகள் இருந்தும் இந்த பள்ளியில் 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு மரத்தடியிலும், சைக்கிள் நிறுத்தும் இடங்கள், விழா மேடைகளிலும் பாடம் நடத்தும் அவல நிலை இருந்து வருகிறது. இதற்கான காரணத்தை பார்க்கலாம் வாருங்கள்.
கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் கடந்த 2019-ம் ஆண்டு உருவானது. இதையடுத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் ஒரு பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தற்காலிகமாக இயங்கி வருகிறது. என்றாலும் அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படுவதற்கு இங்கு போதிய இடவசதி இல்லாததால் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள 2 மாடி கட்டிடங்கள் மற்றும் தலைமை ஆசிரியர் அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டிடம் என 2 கட்டிடங்களையும் கலெக்டர் அலுவலகத்தின் பிற துறைகளுக்காக ஒதுக்கப்பட்டது. இதனால் இந்த கட்டிடங்கள் கடந்த 2 ஆண்டுகளாக கூடுதல் கலெக்டர் அலுவலகமாக இயங்கி வருகிறது.
மேலும் இங்கு மாணவர்கள் படித்து வந்த 6 அறைகளில் விலையில்லா நோட்டு புத்தகம், சீருடை ஆகியவையும், 2 அறைகளில் அரசு தேர்வுகள் துறையின் பொதுத்தேர்வு சம்பந்தமான விடைத்தாள்களும் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வகுப்பறைகளுக்கு இட நெருக்கடி ஏற்பட்டது. 40 அறைகளில் நடைபெற்று வந்த வகுப்புகள் தற்போது 30 அறைகளில் மட்டுமே நடைபெற்று வருகிறது. இட நெருக்கடியால் 6 மற்றும் 7-ம் வகுப்புகளில் தலா 3 பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியின் கீழும், விழா மேடைகள் மற்றும் சைக்கிள் நிறுத்தும் இடங்களிலும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் பள்ளி வராண்டா மற்றும் பிற வகுப்பறைகளில் மாணவர்கள் உட்கார வைத்து நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறார்கள். இதனால் வகுப்புகளை சரியான முறையில் நடத்த முடியாததோடு மாணவர்களும் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளதாக புகார் எழுகிறது.
இதேபால் கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பு மற்றும் நேபால் தெருக்களில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 2,600 மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 4 முனை சந்திப்பில் உள்ள கட்டிடத்தில் 1,500 மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்குள்ள 2 கட்டிடங்களில் உள்ள 4 அறைகளை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கும், தனியார் மெட்ரிக்பள்ளி அலுவலகத்துக்கும் கல்வித்துறை எடுத்துக் கொண்டது. இதனால் ஆய்வகம் மற்றும் போதிய வகுப்பறைகள் இல்லாமல் மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மாணவர்களின் பிரச்சினைகளை களைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர், ஆசிரியர் கழக இயக்குனர் அருண்கென்னடி கூறுகையில்:-
பள்ளியில் வகுப்புகள் நடைபெற்று வந்த கட்டிடங்கள் கூடுதல் கலெக்டர் அலுவலகத்துக்கும், கல்வி தளவாட பொருட்களை வைப்பதற்கும் ஒதுக்கப்பட்டாலும் கூட அதற்கேற்ப மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த இடையூறு இல்லாத வகையில் மாற்று ஏற்பாடுகளை அரசு செய்திருக்க வேண்டும். ஆனால் வகுப்பறைகள் அரசு அலுவலகமாக மாறியதால் தற்போது 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களக்கு மரத்தடி, விழா மேடை, சைக்கிள் நிறுத்தும் இடம் ஆகியவற்றில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தரையில் அமர்ந்து படிப்பதால் சீருடைகளில் அழுக்கு படிந்து விடுகிறது. படிப்பிலும் முழு கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு கல்விதான் முக்கியம். எனவே கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கல்வித் துறையே வகுப்பறைகளை ஆக்கிரமித்து எடுத்துக்கொண்டது. எனவே தமிழக அரசு மாணவர்களின் மன வேதனையை அறிந்து அனைத்து மாணவர்களும் வகுப்பறையில் அமர்ந்து படிக்கும் வகையில் போதிய இட வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றார்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஹாருன்:-
கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் சாலை விரிவாக்கம் செய்யும்போது, இடிக்கப்பட்ட பள்ளி கழிப்பறை கட்டிடத்துக்கு மாற்றாக புதிய கழிப்பறை இதுவரை கட்டப்படவில்லை. இதனால் மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பள்ளியில் உள்ள வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை கல்வித்துறை எடுத்துக்கொண்டதால் போதிய வகுப்பறை வசதி இல்லாமல் மரத்தடி, வறாண்டா மற்றும் ஒரே அறையில் 2 வகுப்புகள் என மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேதனையை ஒரு மாதம், ஒரு வருடம் என்றால் பரவாயில்லை 3 ஆண்டுகளாக மாணவிகள் அனுபவித்து வருகிறார்கள். இதன் மூலம் பள்ளி என்பது மாணவிகளின் நலனுக்கா? அதிகாரிகளின் நலனுக்கா? என்ற கேள்வி எழுகிறது. அரசு அலுவலகங்களுக்கு இடம் தேவைப்பட்டால் தனியார் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து அதில் செயல்படுத்தலாம். அதை விடுத்து பயன்பாட்டில் உள்ள பள்ளி கட்டிடத்தை எடுத்துக்கொண்டால் ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துவார்கள்? மாணவிகளும் படிப்பில் முழு கவனம் செலுத்துவார்களா? என்பதை அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். எனவே அரசு பள்ளிகளில் கையகப்படுத்தப்பட்ட கட்டிடங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். பள்ளி வகுப்பறைகளை மற்ற துறை அலுவலக பயன்பாட்டுக்காக கொடுக்க கூடாது. மேலும் மாணவிகள் என்பதால் போதிய கழிப்பறை வசதியையும் உடனடியாக செய்து தர வேண்டும்.