அரசு பள்ளி மாணவர்கள் லட்சியத்துடன் மேற்படிப்பை தொடர வேண்டும்
அரசு பள்ளி மாணவர்கள் லட்சியத்துடன் மேற்படிப்பை தொடர வேண்டும் என்று நாகர்கோவிலில் நடந்த உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நாகர்கோவில்:
அரசு பள்ளி மாணவர்கள் லட்சியத்துடன் மேற்படிப்பை தொடர வேண்டும் என்று நாகர்கோவிலில் நடந்த உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
வழிகாட்டி நிகழ்ச்சி
குமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் "நான் முதல்வன்" எனும் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு என்ற தலைப்பினை மைய கருத்தாக கொண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
"நான் முதல்வன்" என்ற திட்டத்தின் கீழ் பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்காக "கல்லூரிக் கனவு" எனும் திட்டமானது அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாதிக்க வேண்டும்
இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் பல்வேறு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பயிற்சி பெற்ற அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரி கல்விக்காக வங்கிகள் வாயிலாக கடன் பெறுவது எப்படி? மற்றும் கல்லூரி படிப்பிற்கான உதவித்தொகை பெறுவது குறித்தும் மாணவர்களிடையே எடுத்துக்கூறப்பட்டு வருகிறது.
மாணவர்கள் தங்களது தனித்திறமையை புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அதற்கேற்ற கல்வியினை பயில வேண்டும். உள்ளத்தில் புதைந்திருக்ககூடிய எண்ணங்களை வெளிப்படுத்தி அவற்றில் உங்களுடைய திறமையை உலகளவில் சாதிக்க முன்வர வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்கள்
பெற்றோருக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் கல்வி பயில வேண்டுமென்ற எண்ணத்தை மாற்றி உங்களுக்காகவும், உங்கள் எதிர்காலத்திற்காகவும் கல்வி பயில முன்வர வேண்டும். அரசு பள்ளிகளில் பயில்கின்ற மாணவ-மாணவிகள் தாழ்வு மனப்பான்மையினை மாற்ற வேண்டும். எங்களாலும் நல்ல சூழ்நிலையில் கல்வி பயின்று வாழ்வில் முன்னேற முடியும் என்ற லட்சிய நோக்கத்துடனும், எளிதாக என்னாலும் கல்வி பயில முடியும் என்ற நம்பிக்கையுடன் அரசு பள்ளி மாணவர்கள் மேற்படிப்பை தொடர வேண்டும்.
கல்வி என்பது மிக சக்திவாய்ந்த ஆயுதம். எதிர்காலத்தில் நான் இந்த துறையில் தான் பணியாற்ற வேண்டுமென்ற எண்ணம் மாணவ-மாணவிகளாகிய அனைவரிடமும் இருப்பது இயல்பு. அந்த எண்ணம் நிறைவேறாவிடினும் மனம் தளராமல் விடா முயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்வினை எதிர்கொண்டு ஏற்றம் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புத்தகம் அறிமுகம்
முன்னதாக, "நான் முதல்வன்" என்ற புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிபுகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் (நாகர்கோவில்) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், கணியாகுளம் ஊராட்சி தலைவர் ஏஞ்சலின் சரோனா, ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, வக்கீல் சதாசிவம், பூதலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.