அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை

கழிவறை கட்டப்படாததால் அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-06-13 14:21 GMT

அடுக்கம்பாறை

வேலூரை அடுத்த ஊசூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 280 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு தலைமை ஆசிரியை உள்பட 10 ஆசிரியர்கள் வேலை செய்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள வகுப்பறை மற்றும் கழிவறை கட்டிடங்களை இடிக்க அரசு உத்தரவிட்டது. அப்போது இந்த பள்ளியில் உள்ள கழிவறை கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் உள்ளிட்டவை இடிக்கப்பட்டது. தற்போது வரை கழிவறை கட்டிடம் கட்டபடாததால் மாணவ, மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் திறந்தவெளி கழிப்பறைகள் பயன்படுத்துவதால் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஊசூர் அரசு நடுநிலைப் பள்ளியை முற்றுகையிட்டு, உடனடியாக கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த தலைமை ஆசிரியை சோபனா உடனடியாக உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்