அரசு பள்ளி கட்டிடத்தை இடித்தபோது சுவர் இடிந்து டீக்கடைக்காரர் பலி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடத்தை இடித்த போது அருகில் உள்ள டீக்கடை சுவர் இடிந்து விழுந்ததில் டீக்கடைக்காரர் பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-19 17:56 GMT

அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடத்தை இடித்த போது அருகில் உள்ள டீக்கடை சுவர் இடிந்து விழுந்ததில் டீக்கடைக்காரர் பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளிகட்டிடத்தை இடிக்க உத்தரவு

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் விஷமங்கலம் கிராமத்தில் திருவண்ணாமலை பிரதான சாலையில் அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கட்டிடம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. அரசு உத்தரவின்பேரில் பள்ளிக்கட்டிடத்தை இடிக்க கந்திலி ஊராட்சி ஒன்றியம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை 11 மணியளவில் பள்ளி கட்டிடத்தை பொக்லைன் மூலம் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

இந்த பள்ளியின் அருகே ராஜா (வயது 67) என்பவர் குடிசை கட்டிடத்தில் டீ கடை நடத்தி வந்தார். பள்ளிக்கட்டிடம் இடிக்கும்போது டீக்கடைக்குள் ராஜா இருந்தார்.

இந்த நிலையில் ஆரம்பப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த போது அதிர்வில் டீக்கடை சுவரும் இடிந்து விழுந்தது. அப்போது உள்ளே இருந்த டீக்கடைக்காரர் ராஜா இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளிலிருந்து ராஜாவை மீட்டு வெளியே கொண்டு வந்தபோது அவர் இறந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினரிடம் ஒப்படைப்பதற்காக கொண்டு வந்தனர்.

உடலை வாகனத்தில் ஏற்றியபோது உறவினர்கள் திடீரென உடலை வாங்க மாட்டோம். ராஜாவின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பொக்லைன் எந்திரத்தை இயக்கியவரை கைது செய்ய வேண்டும் என கூறி போராட்டம் நடத்தினரர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, திருப்பத்தூர் தாலுகா போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதில் உடன்பாடு ஏற்படவே 2 மணி நேரம் கழித்து ராஜாவின் உடலை அவரது மகன் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர்.

புறம்போக்கு இடம்

திருப்பத்தூர்-திருவண்ணாமலை மெயின் ரோட்டில் அரசு புறம்போக்கு இடத்தில் ராஜா டீக்கடை நடத்தி வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கூறி சென்றுள்ளனர். ஆனால் அவர் கடையை காலி செய்யவில்லை. மேலும் தொடர்மழை காரணமாக டீக்கடையின் சுவரும் வலுவிழந்து காணப்பட்டது. இந்த நிலையில்தான் அரசு பள்ளி கட்டிடத்தை இடித்த போது அதன் அதிர்வு தாங்காமல் டீக்கடை சுவர் இடிந்து டீக்கடைக்காரர் ராஜா இறந்ததாக அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

பள்ளிக்கட்டிடத்தை இடித்தபோது டீக்கடை சுவர் இடிந்து டீக்கடைக்காரர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்