முன்னாள் மாணவர்கள் நடத்திய அரசு பள்ளி ஆண்டு விழா

ஆண்டிப்பட்டி அருகே முன்னாள் மாணவர்கள், அரசு பள்ளி ஆண்டு விழாவை நடத்தினர்.

Update: 2023-04-04 20:45 GMT

ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கல்வி துறை விதிமுறைப்படி வழக்கமாக இந்த பள்ளியில் கொண்டாடப்படும் ஆண்டு விழா, கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடப்படவில்லை.

இந்தநிலையில் பள்ளியில் 98-வது ஆண்டு விழாவை நடத்த, 2006-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் முடிவு செய்தனர். இதற்காக பல்வேறு ஊர்களில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் 16 மாணவர்கள் ஒன்று சேர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துபேசி ஆண்டு விழா நடத்த ஏற்பாடு செய்தனர். அதன்படி, திம்மரசநாயக்கனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் ஆண்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியஷீலா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் அன்புகுமார் கலந்துகொண்டு பேசினார். பின்னர் திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், பேச்சு, பாட்டு, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

அதேபோல் ஆண்டு விழாவில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் முன்னாள் மாணவர்கள், தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த விழாவில் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஊர் நாட்டண்ாமை மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்