கொட்டும் மழையில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் மறியல்

நாகர்கோவிலில் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் 336 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-14 21:01 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் 336 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரப்பர் கழக தொழிலாளர்கள்

ஊதிய உயர்வு வழங்கக்கோரி குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் கடந்த 7-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் தின்கர் குமார் தலைமையில் நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ரப்பர் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வடசேரி அரசு ரப்பர் கழக அலுவலகம் முன்பு 14-ந் தேதி மறியல் போராட்டம் நடத்த தொழிற்சங்கத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று அனைத்து தொழிலாளர் சங்கங்கள் சார்பில் நாகர்கோவில் வடசேரி அரசு ரப்பர் கழக அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொது செயலாளர் வல்சகுமார் தலைமை தாங்கினார். துணை தலைவா் நடராஜன், ஐ.என்.டி.யு.சி. கிழக்கு மாவட்ட தலைவா் பொன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொட்டும் மழையில் மறியல்

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், தொ.மு.ச. மாநில துணை தலைவர் இளங்கோ, எம்.எல்.எப். தலைவர் பால்ராஜ், செயலாளர் ஜெரால்டு மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கொட்டும் மழையிலும் அரசு ரப்பா் கழக தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் நாகா்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், ராமர், ஜெயலட்சுமி ஆகியோா் கலைந்து செல்லும்படி போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் மறியலை கைவிடவில்லை.

336 போ் கைது

இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொது செயலாளர் வல்சகுமார் உள்பட 336 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள ஒரு மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதில் 153 பேர் பெண்கள். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்