ஆபத்தான நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலைய கட்டிடம்

தஞ்சையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலைய கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளதால் புதிதாக கட்டப்படுமா? என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-08-08 20:52 GMT


தஞ்சையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலைய கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளதால் புதிதாக கட்டப்படுமா? என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

அரசு விரைவு போக்குவரத்து கழகம்

மக்களின் போக்குவரத்து வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அல்ட்ரா டீலக்ஸ்' பஸ், குளிர்சாதன வசதி பஸ், படுக்கை வசதிகொண்ட குளிர் சாதன வசதி பஸ், படுக்கை மற்றும் இருக்கை வசதிகொண்ட குளிர்சாதன பஸ், படுக்கை வசதிகொண்ட பஸ், படுக்கை மற்றும் இருக்கை வசதிகொண்ட பஸ், கிளாசிக் பஸ் போன்றவை இயக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து விரைவு பஸ்கள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகின்றன. தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையும், விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையமும் உள்ளது. இங்கிருந்து தான் சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மோசமான நிலையில் கட்டிடம்

வெளியூர் செல்வதற்காக விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தான் போதுமான அளவு இல்லை. அதுமட்டுமின்றி கட்டிடங்களும் மிகவும் மோசமாக செடிகள் வளர்ந்துள்ளது. அதுவும் மக்கள் நிற்கக்கூடிய இடங்களில் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த கட்டிடங்களில் பெரும்பாலான இடங்களில் விரிசல் விழுந்து, சிமெண்டு காரை பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது.

ஏற்கனவே தொடர்ந்து மழை பெய்தால் கட்டிடங்களில் ஆங்காங்கே பெயர்ந்து இருக்கக்கூடிய சிமெண்டு காரை கீழே விழுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி பெயர்ந்து விழுந்தால் பஸ்சிற்காக காத்து நிற்கக்கூடிய மக்கள் மட்டுமின்றி அவர்களை பஸ்சில் ஏற்றி விடுவதற்கு வந்த உறவினர்களும் பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி கட்டிட தூண்களிலும் சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலை உள்ளது. ஆங்காங்கே மக்கள் நிற்கக்கூடிய தரைதளமும் உடைந்து பள்ளமாக காட்சி அளிக்கிறது. எனவே கட்டிடங்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.

தேங்கும் தண்ணீர்

அதுமட்டுமின்றி பஸ் நிலையத்தின் நுழைவு பகுதியில் அடிக்கடி தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய நிலையும் உள்ளது. பஸ்களை கழுவக்கூடிய தண்ணீர் வெளியே செல்வதற்கு வழியில்லாமல் நுழைவு வாயிலில் தேங்கி நிற்கிறது. லேசாக மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு செல்லக்கூடியவர்கள் அந்த தண்ணீரில் நடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர வடிகால் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து தஞ்சை மாவட்ட சி.ஐ.டி.யூ. துணைச் செயலாளர் அன்பு கூறும்போது, அரசு போக்குவரத்து கழக பஸ் நிலைய கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏற்கனவே பொறையாறு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் பலியானார்கள். அதுபோன்ற நிகழ்வு வேறு எங்கேயும் நடைபெறாமல் இருக்க பழுதான கட்டிடங்களை சீரமைக்க உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். பொறையாறு விபத்து நடந்தவுடன் எல்லா பணிமனைகளும், பஸ் நிலையங்களும் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஆபத்தான நிலையில் உள்ள விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலைய கட்டிடத்தை இடித்துவிட்டு, பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்