தமிழக அரசு மதக்கலவர தடுப்புச்சட்டத்தை இயற்ற வேண்டும்இஸ்லாமிய இயக்கங்கள் நடத்திய மாநாட்டில் தீர்மானம்

தமிழக அரசு மதக்கலவர தடுப்புச்சட்டத்தை இயற்ற வேண்டும் என திருச்சியில் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நடத்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-25 20:27 GMT

தமிழக அரசு மதக்கலவர தடுப்புச்சட்டத்தை இயற்ற வேண்டும் என திருச்சியில் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நடத்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கவன ஈர்ப்பு மாநாடு

தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் "வெறுப்பு அரசியலை வேரறுப்போம்" என்னும் தலைப்பில் கவன ஈர்ப்பு மாநாடு திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே நேற்று மாலை நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி தலைமை தாங்கினார். அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. வெங்கடேசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ, பொதுச்செயலாளர் அப்துல்சமது எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. துணை நிற்கும்

அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, இந்துக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக மத்திய பா.ஜ.க. அரசு வெறுப்பு அரசியலை உருவாக்குகிறது. முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்கிறோம். எப்போதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பார். தி.மு.க. இயக்கமும் துணை நிற்கும் என்றார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேசுகையில், இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற மாநாடு நடத்துவதே கவலையை ஏற்படுத்துகிறது. மத்திய பா.ஜ.க. அரசு வெறுப்பு அரசியலை உருவாக்கி மக்களிடையே பிளவை ஏற்படுத்த பார்க்கிறது. இந்த மாநாடு மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. இனி, நபிகள் நாயகத்தை பற்றி யார் பேசினாலும் இந்திய முழுவதும் மிகப்பெரிய கூட்டம் கூடும் என்றார்.

வெறுப்பு அரசியலை வேரறுக்க...

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது, நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய பா.ஜ.க.வை சேர்ந்த 2 பேரை கைது செய்ய வேண்டும் என்பது மட்டும் கோரிக்கை அல்ல. வெறுப்பு அரசியலை வேரறுக்க வேண்டும். இந்த வெறுப்பு அரசியல் உள்நோக்கத்தோடு திட்டமிட்டு செய்யப்படுகிறது என்றார்.

மதக்கலவர தடுப்பு சட்டம்

மாநாட்டில் முகமதுநபியை அவதூறாக பேசிய பா.ஜ.க. வை சேர்ந்த நுபுர்சர்மா, நவீன்ஜிண்டாலை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழக அரசு மதக்கலவர தடுப்புசட்டத்தை இயற்ற வேண்டும். நாட்டின் நிலவும் வெறுப்பு அரசியலை தடுத்து நிறுத்த உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோடிக்கணக்கான மக்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பி வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பைஸ்அகமது மற்றும் ஜமாத்துல் உலமா, அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்