அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் கலெக்டர்-எம்.எல்.ஏ. ஆய்வு

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் கலெக்டர்-எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்து சுகாதாரமாக பராமரித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

Update: 2023-09-16 18:45 GMT

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் கலெக்டர்-எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்து சுகாதாரமாக பராமரித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

பயிற்சி டாக்டர் சாவு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பசும்பரா பகுதியை சேர்ந்த சிந்து என்பவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த 4 ஆண்டுகளாக மருத்துவ படிப்பை முடித்து விட்டு பயிற்சி டாக்டராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கு டைபாய்டு காய்ச்சல் மட்டுமே இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவருடைய ரத்தம் மாதிரி சென்னைக்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.

கலெக்டர்-எம்.எல்.ஏ. ஆய்வு

இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுகின்றதா ?என்பது குறித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாணவ-மாணவிகள் தங்கக்கூடிய விடுதி மற்றும் தாய்-சேய் நலப்பிரிவு ஆகியவற்றிற்கு பின்புறம் புதர் மண்டியிருப்பதையும், மருத்துவக்கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு எதிரில் தண்ணீர் தேங்கி நிற்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

புதர்கள் அகற்றம்

மழை பெய்து வருவதால் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். புதர்களை அகற்றி சுத்தம் செய்திடவும், ஆஸ்பத்திரி வளாகத்தை சுகாதாரமாகவும், எந்தவித நோய் தொற்றும் ஏற்படாத வகையில் பராமரித்திட அதிகாரிகளுக்கு கலெக்டரும், எம்.எல்.ஏ.வும் அறிவுறுத்தினர். இதனையடுத்து உடனடியாக பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் புதர்கள் அகற்றும் பணி தொடங்கியது.இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் சங்கீதா, தாசில்தார் நக்கீரன் மற்றும் பொதுப்பணித்துறை, மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்