பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசு பரிசீலனை -அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசு பரிசீலனை செய்யும் என்று பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

Update: 2023-06-14 23:09 GMT

திருச்சி,

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று திருச்சி கொட்டப்பட்டு ஆவின் பால்பண்ணைக்கு சென்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அங்கு பால் உற்பத்தியாளர்களுக்கு கடனுதவி, மானிய உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்று 776 பயனாளிகளுக்கு ரூ.4.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பால் உற்பத்திக்கு முதுகெலும்பாக பால் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில் பால் உற்பத்தி குறைந்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இதே நிலை தான் இருக்கிறது. ஆகவே பால் உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாய சூழல் உள்ளது. தற்போது ஆவின் நிறுவனம் 45 லட்சம் லிட்டர் பாலை கையாளுவதற்கான திறனில் உள்ளது. அதனை 70 லட்சம் லிட்டராக அதிகரிக்க செய்ய பணி தொடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் நிறுவனம்

பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த ஒரு மாதத்தில் பால் கொள்முதல் 28 லட்சம் லிட்டரில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தி கேட்பது நியாயமானது. இதனை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும். ஆவின் நிறுவனத்தை பொருத்தமட்டில் பால் உற்பத்தி அதிகமானாலும் குறைந்தாலும் ஒரு நிலையான விலையை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்கள் அவ்வாறு வழங்குவதில்லை. தனியார் நிறுவனத்தை கண்டு ஒரு அரசாங்கம் அச்சப்படாது. இருக்கும் கட்டமைப்புகளை மேம்படுத்தினாலே தனியார் நிறுவனங்களின் சவால்களை எதிர்கொள்ள முடியும். ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்