அரசு தலைமை மருத்துவமனை மீண்டும் இயங்க வேண்டும்
புதுக்கோட்டை நகரப்பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை மீண்டும் இயங்க வேண்டும் என மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்.;
அரசு தலைமை மருத்துவமனை
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் பா.ஜ.க.வின் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் பா.ஜ.க.வினர் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:- புதுக்கோட்டை நகரப்பகுதியில் செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரியுடன் நகரப்பகுதியை தாண்டி சுமார் 5½ கிலோ மீட்டர் தூரம் தாண்டி உள்ளது. இதனால் விபத்து மற்றும் அவசர காலங்களில் நகரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி, தனியார் மருத்துவமனையை நாடும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே நகரப்பகுதியில் செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்தி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மேலும் இரவு நேரங்களில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு நோயாளிகள், பார்வையாளர்கள் சென்று வர பஸ் வசதி இல்லை.
அதிக விலைக்கு விற்பனை
மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் கேண்டீன்கள், உணவகங்கள், டீக்கடைகளில் மக்களிடம் தரமற்ற பொருட்கள் அதிக விலைக்கு அதிகாரமாக விற்கப்படுகிறது. இரவு நேரங்களில் நோயாளிகளின் பார்வையாளர்கள் வெளியில் கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள். அவர்கள் பாதுகாப்பற்ற வனப்பகுதிகளில் தங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது,
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இதேபோல மற்றொரு மனுவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நோட்டுகள், சீருடை, காலணி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது அலி மனு அளித்திருந்தார்.
புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. மகளிர் அணி தலைவர் அமுதவள்ளி தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், மணல் அள்ளும் உரிமையை மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
369 மனுக்கள் பெறப்பட்டன
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தினை 9 ஏ நத்தம் பண்ணை ஊராட்சியில் சண்முகாநகர், செல்வாநகர், சிப்காட் நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுத்த வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 369 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஸ்ருதி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.