அரசு பொருட்காட்சிநாளை மறுநாள் தொடங்குகிறது

சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் அரசு பொருட்காட்சி நாளை மறுநாள் தொடங்குகிறது. இதனை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் சாமிநாதன் ஆகியோர் திறந்து வைக்கிறார்கள்.

Update: 2023-09-03 17:07 GMT

அரசு பொருட்காட்சி

சேலத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருட்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அங்கு அரசு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்ட செய்தி- மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு அரசு பொருட்காட்சி தொடக்க விழா நடைபெறுகிறது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு அரசுப் பொருட்காட்சியை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.

27 அரசுத்துறை அரங்குகள்

விழாவில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்பட செய்தி- மக்கள் தொடர்புத்துறை இயக்குனர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

இப்பொருட்காட்சியில், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, செய்தி- மக்கள் தொடர்புத் துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, வருவாய்த் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆவின், சேலம் மாநகராட்சி உள்ளிட்ட 6 அரசு நிறுவனங்கள் என மொத்தம் 33 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

45 நாட்கள் நடைபெறும்

இந்த அரங்குகளில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மைத் துறை, மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி இடம்பெறவுள்ளது. நாள்தோறும் மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருட்காட்சி நாளை மறுநாள் தொடங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்