பல்வேறு அரசு துறைகளில் காலியாகவுள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப அரசு ஊழியர் சங்க பேரவை கோரிக்கை

பல்வேறு அரசு துறைகளில் காலியாகவுள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப அரசு ஊழியர் சங்க பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-09-10 18:45 GMT

6 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தூத்துக்குடியில் நடந்த அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பேரவை கூட்டம்

தூத்துக்குடி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சின்னத்தம்பி தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் உமாதேவி வரவேற்றார். முன்னதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடி, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன கொடி ஆகியவை ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர் பெரியசாமி தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலர் முருகன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் மு.தமிழரசன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். ஓய்வு பெற்ற அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் சுப்பிரமணியன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க துணை பொதுச்செயலர் வெங்கடேசன், சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

தீர்மானம்

கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதிக்குப் பின்னர் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைத்தலை மீண்டும் வழங்க வேண்டும். அரசுத்துறையில் பணியாற்றும் செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடத்தி, இத்திட்டத்தை மேலும் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன போன்ற 15 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கிறிஸ்டோபர், மாநில செயற்கு உறுப்பினர் அண்ணாமலை பரமசிவன் உள்பட சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்