அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்-ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Update: 2023-03-28 18:54 GMT

கோரிக்கைகள்

தி.மு.க.வின் தேர்தல் கால வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு வழங்கிடும் அதே தேதியில் வழங்கிட வேண்டும். அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்கிட வேண்டும். வருவாய் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக ரூ.15,700 ஊதியம் வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் பணி நியமனம் செய்து காலமுறை ஊதியம் மற்றும் சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

வேலை நிறுத்த போராட்டம்

41 மாத பணி நீக்க காலத்தை ஓய்வூதியத்திற்கு பொருந்தும் வகையில் பணிவரன்முறை செய்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுஞ்சாலைத்துறை, வணிகவரித்துறை, கால்நடைத்துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணன், மாநில செயலாளர் விஜயகுமார் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட செயலாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

இதேபோல் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 115-ஐ ரத்து செய்திட வேண்டும். அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்தவுடன் வழங்கிட வேண்டும். முடக்கப்பட்ட சரண்விடுப்பை வழங்கிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. சுகாதாரத்துறை, வேளாண்மை துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் செல்வராணி, மாவட்ட செயலாளர் சக்திவேல், பொருளாளர் பொன்.ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் கரூர் வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்