தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-09 16:41 GMT

சி.ஐ.டி.யூ. தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது, பெரியகுளம் ஒன்றியம் சருத்துப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை கண்டித்தும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு 2 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், சம்பளம் வழங்கக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி தலைமை தாங்கி பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் காமுத்துரை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர், அவர்கள் தங்களின் கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டர் முரளிதரனிடம் கொடுத்தனர்.

இதேபோல், அனைத்து கள்ளர் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் போடி புதூர் ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்த மக்கள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "போடி போயன்துரை ரோடு பகுதியில் வசிக்கும் 300 குடும்பங்களுக்கு பாதை வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்