காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சேலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம் நடத்தினர். சேலம் கோட்டை மைதானத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சுகுமார் தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் திருவேரங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ் கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.
இதில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். கோட்டை மைதானத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம், கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.