அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்பணிகள் பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினர். பணிகள் பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பறிக்கப்பட்ட சரண் விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும். அக விலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும்.
தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்தது.
வேலை நிறுத்தம்
அதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினர். இதில் தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலகங்கள், கூட்டுறவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மருத்துவம், பொதுப்பணித்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித் துறை, கருவூலம், புள்ளியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், நில அளவை பிரிவு உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் வேலையை புறக்கணித்தனர். இதனால் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்டு அரசு அலுவலகங்கள் செயல்பட்டன. ஒரு சில பிரிவுகளில் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. சில அலுவலகங்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் பணிக்கு வந்திருந்ததையும் பார்க்க முடிந்தது. அரசு ஊழியர்களின் இந்த போராட்டத்தால், சாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள், நில அளவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
ஆர்ப்பாட்டம்
தொடர்ந்து அரசு ஊழியர்கள் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் வெங்கடாசலபதி, கவியரசு, மாவட்ட இணை செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். இதில் அனைத்து துறை ஓய்வூதிய சங்க மாவட்ட துணை தலைவர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பிலும் வேலை நிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
4 ஆயிரம் பேர் பங்கேற்பு
இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி, மாவட்ட தலைவர் அல்லிமுத்து, அமைப்பு செயலாளர் தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட செயலாளர் விவேகானந்தன் நன்றி கூறினார். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.